Karunanidhi Statue

 

அங்கும் இங்குமாக கலைஞர் கருணாநிதியின் சிலைகளை நீங்கள் பல இடங்களில் இன்று காண முடியும். ஆனால் அவருக்கு முதன்முதலில் உருவாக்கப்பட்ட சிலை குறித்தும், அது உடைக்கப்பட்ட காரணம் குறித்தும் தெரியுமா உங்களுக்கு? தெரிந்து கொள்ளுங்கள்...

கலைஞர் கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் அதை அறிக்கையாக வெளியிட்டதும் தந்தை பெரியார் தான்.
1968-ம் ஆண்டு அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். அது அப்போது பெரிதாகக் கவனிக்கப்படாமல் விடப்பட்டது.

அடுத்ததாக அண்ணா மறைவுக்குப் பிறகு,  1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி பெரியார் திடலில் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பெரியார் ``தம்பிக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்" என்று இரண்டாவது முறையாக கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் அவருக்குச் சிலை வைக்கவேண்டும் என்றும் பெரியார் தெரிவித்தார். இந்த கோரிக்கையை மேடையில் அமர்ந்திருந்த குன்றக்குடி அடிகளார் மற்றும் பலர் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்.  

சிலைக் குழுவுக்கு புரவலர் தந்தை பெரியார்
தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி.
துணைத் தலைவர்கள்: நெ.து.சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்), மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன்
செயலாளர் கி.வீரமணி

திகைத்துப்போன கலைஞர் கருணாநிதி பெரியாரின் கோரிக்கையை எப்படி நிராகரிப்பது என்று தெரியாமல் சங்கோஜமும் சங்கடமும் அடைந்தார். அடுத்து மேடையில் பேசிய முதல்வர் கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு முதலில் ஒரு சிலை அமைக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை வைப்பதைக் குறித்து சிந்திக்கலாம் என்று கூறி தட்டிக்கழித்தார்.

சொன்னபடியே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அந்த சிலை திறப்பு விழாவில் பேசிய தி.க தலைவர் மணியம்மை, அன்று நீங்கள் சொன்னபடியே பெரியாருக்கு இன்று சிலை அமைத்துவிட்டீர்கள். அதேபோல் இனியும் தட்டிக்கழிக்காமல் பெரியார் ஆசைப்பட்ட படி உங்களுக்குத் திராவிட கழகம் சார்பில் அண்ணா சாலையில் சிலை எழுப்பப்படும் இதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையும் போட்டார்.

இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா சாலையில் தர்கா அருகில் கலைஞர் கருணாநிதியின் ஆள் உயரச் சிலை அமைக்கப்பட்டு 1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த நிகழச்சியை தி.க தலைவர் மணியம்மை அம்மையார் தலைமை தாங்க, குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இந்த சிலை திறப்புக்கு அதிமுக சார்பில் தடை விதிக்க வழக்குத் தொடரப்பட்டதும் பின்பு அந்த வழக்கில் திராவிட கழகம்  வெற்றியடைந்ததும் வேறு கதை.

காலம் கடந்தது...

1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, சென்னை மாநகரம் முழுக்க கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தொண்டர்கள் சிலர், அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையைக் கடப்பாரையைக் கொண்டு சேதப்படுத்தியதுடன், சிலையை இடித்துத் தள்ளினார்கள். இந்த செய்தி அறிந்து திமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்தார்கள். கலைஞர் கருணாநிதியின் சிலை உடைக்கப்படும் புகைப்படம்  ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கருணாநிதி அப்போது முரசொலி பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்...

"உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!"

 

 


தனது சிலை உடைக்கப்பட்ட நிகழ்வை நகைச்சுவையாக கையாண்ட கருணாநிதியை பலரும் பாராட்டினார்.
அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார். இதையடுத்து தி.க.வினர் அந்த முயற்சியைக் கைவிட்டனர்.  

இந்த சிலை உடைக்கப்படாமல் இருந்திருந்தால் அண்ணா சாலையின் தொடக்கத்தில் பெரியார் சிலை, அதிலிருந்து சற்று தூரம் தள்ளி  ரிச்சி ஸ்ட்ரீட் அருகே அண்ணா சிலை, அடுத்தபடியாக சற்று தொலைவில் தர்கா அருகில் கலைஞர் சிலை, இன்னும் கொஞ்சம் தாண்டி வந்தால் ஸ்பென்சர் அருகே எம்.ஜி.ஆர் சிலை என அண்ணா சாலையில் திராவிட தூண்களாக இவர்கள் நால்வர் சிலையும் வரிசையாக அமைந்திருக்கக்கூடும். ஆனால் அந்த கொடுப்பினை இந்த சிலை உடைப்பால் இல்லாமல் போனது வருத்தம்தான்.

பி.கு: இந்த சிலையின் சரியான புகைப்படம் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கட்டுரையைப் படிக்கும் யாவருக்கும் இந்த சிலையை பார்க்க வேண்டும் என்று தோன்றாமல் போக வாய்ப்பில்லை. நண்பர் ஒருவர் பரிந்துரைத்த கட்டுரையில் ஒரு துணுக்கு கிடைத்து தேட ஆரம்பித்ததில் 1981-ஆம் ஆண்டு ராம நாராயணன் இயக்கிய 'பட்டம் பறக்கட்டும்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘’எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே... ஏழைகள் நாட்டினிலே’’ என்ற பாடலில் இந்த சிலை காட்சிப் படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. இந்தப் பாடலில் மெரினா கடற்கரையில் இருக்கும் சிலைகள் தொடங்கி அண்ணா சாலையில் இருக்கும் சிலைகள் வரை கல்லூரியின் அரசியல் அடக்குமுறையை எதிர்த்து குரல்கொடுக்கிற மாணவர்கள் ஊர்வலமாகச் செல்கிறார்கள். இந்த சிலைகள் வரிசையில் அப்போதிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையும் இடம்பெற்றிருக்கும். இந்த படத்தின் யூடியூப் லிங்கையும் இந்த கட்டுரையில் இணைத்துள்ளேன்.

பட்டம் பறக்கட்டும்: https://www.youtube.com/watch?v=vhrtSaRvHO0

பல சிலைகள்... பல கதைகள்... மீண்டும் சிந்திப்போம்!

 

Kalaignar Karunanidhi Bust Sculpture -
Bronze, Gold & Black - 8"

Comments

Bharath Kumar

Bharath Kumar said:

Hi sir

Leave a comment